search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில் வார்டன் சஸ்பெண்டு"

    பாளையில் திருமணம் முடிந்த 25-வது நாளிலேயே காதல் மனைவியை தலை துண்டித்து கொன்ற ஜெயில் வார்டன் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள தாழையூத்து அடுத்த தென்கலத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது27). இவரது மனைவி வேலம்மாள் (21).

    காதல் திருமணம் செய்த 25-வது நாளான நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர். பாளை பொட்டல் நான்கு வழிச்சாலையில் சென்றபோது காதல் கணவர் வேறு எதற்கோ தன்னை அழைத்து செல்கிறார் என்று தெரிந்த வேலம்மாள் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி கீழே இறங்கி உள்ளார்.

    அப்போது பாலகுரு மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி வேலம்மாளை ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டி படுகொலை செய்தார்.

    பின்பு தனியாக தலையை துண்டித்து எடுத்து சாலையின் மறுபுறம் வீசி விட்டு, பாளை போலீசில் சரண் அடைந்தார். நேற்று காலை போலீசார் அவரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்யப்பட்ட வேலம்மாள் உடலையும், தலையையும் மீட்டனர்.

    இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பாலகுரு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2011-ம் ஆண்டு மதுரை மத்திய ஜெயிலில் வார்டனாக பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு எனக்கு உடல் நிலை சரியில்லாததால் விடுமுறையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது என்னை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது அங்கு எனது ஊரை சேர்ந்த வேலம்மாள் நர்சிங் மாணவியாக இருந்தது தெரியவந்தது. ஒரே ஊர் என்பதால் நாங்கள் செல்போன் மூலம் அடிக்கடி பேசி பழகி வந்தோம். இதில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த மாதம் 30-ந்தேதி நான் தனிமையில் வீட்டில் இருந்த வேலம்மாளை சந்தித்து பேச அவரது வீட்டிற்கு சென்றேன்.

    அப்போது நான் அவருடன் ஒன்றாக இருந்ததாக கூறி வலுக்கட்டாயமாக மறுநாளே எனக்கும், வேலம்மாளுக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதற்கு எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறவினர்கள்- நண்பர்களை அழைத்து விமரிசையாக திருமணம் நடத்தாதது எனக்கும் ஒரு குறையாக தெரிந்தது.

    இதனால் நான் என் மனைவியை இப்படி அவசரப்பட்டு விட்டாயே என்று சத்தம் போட்டேன். ஆனால் அவள் தனிக்குடித்தனம் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தாள். இந்த பிரச்சினை காரணமாக நான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாளை மத்திய ஜெயில் வார்டனாக பணி மாறுதல் பெற்று வந்தேன்.

    இதனால் தினசரி பணி முடிந்ததும் வீட்டுக்கு வருவேன். அப்போது வேலம்மாள் செல்போனில் அடிக்கடி வெளியில் பேசிக்கொண்டு இருப்பாள். வாட்ஸ்-அப்பிலும் எப்போதும் பலருடன் பேசுவாள். இதனால் எனக்கு அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இப்படி எனது வாழ்க்கையை சீரழித்து விட்டாளே என்று நினைத்து அவளை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதன்படி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி இடையில் கொலை செய்ய வேண்டும் என்று அரிவாளை எடுத்து மறைத்து வைத்து இருந்தேன். அதன்படி பாளை பொட்டல் அருகே வந்த போது என் மனைவி வேலம்மாளை வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை பாலகுருவை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். எந்த சிறையில் வார்டனாக இருந்தாரோ, அதே சிறையில் கைதியாக பாலகுரு அடைக்கப்பட்டார். இதுகுறித்து பாளை சிறை அதிகாரிகள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்று பாலகுருவை ‘சஸ்பெண்ட்’ செய்து சிறைத் துறை டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.


    ×